விபத்து குறித்து விசாரிக்கச் சென்ற காவலர்கள் இருவர் பலி..!!
விபத்து குறித்து விசாரிக்கச் சென்ற காவலர்கள் இருவர் பலி..!!
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அணைப்பாளையம் பிரிவு பகுதியில் பாலப்பணிகளும், சாலை விரிவாக்கப் பணிகளும் நடந்துவருகின்றன. இதனால் சாலை ஆங்காங்கே தோண்டப்பட்டும், ‘டேக் டைவர்ஷன்’ எனும் பதாகைகள் உள்ளதால் இந்த வழித்தடத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு சற்றே குழம்பிப் போகின்றனர்.
இந்நிலையில் இரவு 1 மணியளவில் திருநெல்வேலியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற காரை ஓசூரைச் சேர்ந்த அரியநாயகம் என்பவர் ஓட்டி சென்றார். அப்போது, பாலம் வேலை நடப்பதால் பக்கவாட்டில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டிருப்பது தெரியாமல் தடுப்புச்சுவரின் மீது மோதி நிறுத்தினார். இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் பெரிய காயங்கள் ஏதுமின்றி தப்பினர். அதேநேரம் கார் மிகவும் பழுதடைந்ததால் அதை மீட்க ரெக்கவரி வாகனம் தேவை என காவல் துறையிடம் உதவிகோரினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ராசிபுரம் காவலர் தேவராஜ், புதுச்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். காரில் இருந்தவர்களுடன் விசாரணை நடத்திக்கொண்டிருந்த நிலையில், திடீரென அந்த வழியாக அதிவேகமாக வந்த வேன் காவலர்கள் மீது மோதியது. இதில் சந்திரசேகர் மற்றும் தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காவலர்கள் இருவரும் தங்களோடு, தலா ஒரு ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸை அழைத்து வந்திருந்தனர். அவர்கள் அதேநேரத்தில் இன்னொரு டாரஸ் லாரியை தடுத்து நிறுத்திக்கொண்டிருந்ததால் வேறு இடத்திற்குச் சென்றிருந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாகத் உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மாதையன், வேனில் வந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேரும் காயங்களுடன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழந்த காவலர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களின் இறுதி சடங்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ ஆர்.என்.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் முதல்வர் நிதியிலிருந்து வழங்கவும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர காயமுற்று சிகிச்சை பெற்று வருவோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.