குஜராத் பல்கலை. கண்காட்சியில் இந்து கடவுள்கள் அவமதிப்பா? - எதிர்ப்பும் மறுப்பும்
குஜராத் பல்கலை. கண்காட்சியில் இந்து கடவுள்கள் அவமதிப்பா? - எதிர்ப்பும் மறுப்பும்
வதோதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் மிகவும் பழமைவாய்ந்தது. இந்த பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் வைக்கப்பட்ட படங்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழகத்தில் நுண்கலை ஆசிரியர்களின் ஆண்டு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் கலைப் படைப்புகளை தயாரித்திருந்தனர். இருப்பினும், அந்த கலை வேலைகளில் சில சீற்றத்தை உருவாக்கியது. அதாவது சில மாணவர்கள் இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் உருவப்படங்களை உருவாக்க பேப்பர் கட்கள் பயன்படுத்தியது மற்றும் சிலர் நிர்வாண ஓவியங்களை வரைந்தனர் என்பதே இங்கு புகார்.
இதுபோன்ற உருவப்படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட செய்தி தாள்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொண்டது என்றும் தெரிவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து, ஏபிவிபி அமைப்பு மாணவர்கள் கண்காட்சியை முற்றுகையிட்டு முழக்கங்களுக்கு மத்தியில் டீனை ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். மேலும் மாணவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஏபிவிபி தலைவர்கள் டீன் மற்றும் துணைவேந்தரிடம் மனு அளித்தனர்.
ஏபிவிபி துணைவேந்தருக்கு எழுதிய கடிதத்தில், பாலியல் பலாத்கார செய்தித் துணுக்குகளைப் பயன்படுத்தி இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் உருவப்படத்தை உருவாக்குவது வெட்கக்கேடானது. இந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் புகைப்படங்களுக்குப் பின்னால், பலாத்காரச் செய்தி துணுக்குகள் சேர்க்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபைன் ஆர்ட்ஸ் பீடத்தில் நடந்த கண்காட்சிக்கான சில கலைப் படைப்புகள், கடவுள் மற்றும் தெய்வங்களின் உருவப்படங்கள் பலாத்காரங்களைப் பற்றி பேசும் செய்தித்தாள் துணுக்குகளால் செய்யப்பட்டதால் இந்துக்களுக்கு புண்படுத்துவதாக உள்ளது, பலாத்காரப் பிரச்சினைகளைப் பேசவும் முன்னிலைப்படுத்தவும் விரும்பினால், அதற்கு இந்து கடவுள்களையும் தெய்வங்களையும் ஏன் இழுக்க வேண்டும்? என்று ஏபிவிபி அமைப்பினர் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பல்கலைக்கழகம் எங்களிடம் உறுதியளித்துள்ளது.
இது குறித்து ஏபிவிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், கலை என்ற பெயரில் இந்து கடவுள் மற்றும் தெய்வங்களின் படங்கள் வேண்டுமென்றே சிதைக்கப்பட்டு அவமதிக்கப்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஏபிவிபி கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் ஏபிவிபியின் இந்த குற்றச்சாட்டுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.