காலி பணியிடங்கள் விரைவில் நிரப்படும்.. பேரவையில் அமைச்சர் பிடிஆர் உறுதி..!
காலி பணியிடங்கள் விரைவில் நிரப்படும்.. பேரவையில் அமைச்சர் பிடிஆர் உறுதி..!
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், “கருவூலத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் பணிச்சுமை அதிகரித்து காணப்படுகிறது.
மாவட்ட சார் கருவூல கணக்கு அலுவலகத்தில் 9 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதிய கணக்கும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு கணக்கு வழக்கும் பார்க்கப்படுகின்றன.
எனவே, அங்கு ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 243 அலுவலகத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளித்த நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு நடத்துவதில் பல பிரச்சினைகள் உள்ளன. நீதிமன்றம், கொரோனா என பல தேர்வுகள் தள்ளிப்போய் இருப்பதால் தான் காலி பணியிடங்கள் அதிகரிப்புக்கு காரணம்.
மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வது, அரசாணை அமல்படுத்தப்படுவது, சான்றிதழ் சரிபார்பது என அனைத்தையும் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கினால், பணி ஆணை பெற்றதிலிருந்து ஓராண்டிற்கு பணியிட மாறுதல் செய்யக்கூடாது. ஒரு அரசு ஊழியர் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றக்கூடாது.
அங்கேயே பணியாற்றினால் அங்கு பிரச்னைகள் ஏற்படும், பணியின் நிமித்தமாக பதவி உயர்வு பெற்றால் அந்த அதிகாரி வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அவர் மீது உள்ள புகாரை அவரே விசாரிக்கும் நிலை ஏற்படும்.
இவை எல்லாம் தமிழ்நாட்டில் சரியாக பின்பற்றப்படுவது கிடையாது. ஆகவே, இதை கலையவே மனிதவள மேம்பாடு மையம் குழு அமைத்து சீர்திருத்தம் செய்து வருகிறோம், விரைவில், காலி பணியிடங்கள் நிரப்படும்” எனத் தெரிவித்தார்.