அடாவடியில் விஜய் ரசிகர்கள்.. தடியடி நடத்திய போலீசார்.. கடலூரில் பரபரப்பு..!

அடாவடியில் விஜய் ரசிகர்கள்.. தடியடி நடத்திய போலீசார்.. கடலூரில் பரபரப்பு..!

Update: 2022-04-07 19:06 GMT

நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற 14-ந் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில், ‘பீஸ்ட்’ படத்திற்கு இன்று முதல் தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ரசிகர் ஷோவுக்கான டிக்கெட் எடுப்பதற்காக, கடலூரைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் இன்று காலை 11.30 மணி அளவில் அண்ணா பாலம் அருகில் உள்ள தியேட்டருக்கு சென்றனர்.

அப்போது, ரசிகர் ஷோவுக்கான டிக்கெட் தற்போது கொடுக்க முடியாது என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, போலீசாருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இதில் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதற்கிடையே, அவர்களில் 5 பேர் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்ததால், அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி, வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று, ‘அரசியல் கட்சித் தலைவர்கள், அரசுப் பதவியில் உள்ளவர்களை இழிவுபடுத்தும் வகையில் போஸ்டர்கள், மீம்ஸ், இணையப் பதிவு போன்றவற்றை செய்யக்கூடாது.

இதை யாரேனும் மீறினால், இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று, ரசிகர்களுக்கு விஜய் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நடிகர் விஜய்யின் அறிவுறுத்தலையும் மீறி, ‘பீட்ஸ்’ படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதற்காக விஜய் ரசிகர்கள் இவ்வாறு அடாவடியாக நடந்துகொண்டது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

Similar News