விஜயகாந்த் உடல் நிலை.. தேமுதிக கடும் கண்டனம்..!
விஜயகாந்த் உடல் நிலை.. தேமுதிக கடும் கண்டனம்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாக தேமுதிக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறது.
ஏற்கனவே, விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூ-டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேமுதிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்தும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் தொலைக் காட்சிகளையும், பத்திரிகைகளையும் தேமுதிக தலைமை கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
இனிமேல், இது போன்ற பொய்யான செய்திகள் வெளியிடுவதை தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மேலும், விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் நம்ப வேண்டாம். அடுத்தவரின் உடல்நிலை குறித்து தவறான செய்தியை பரப்பி அதன் மூலம் ஆதாயம் தேடும் ஈனத்தனமான செயல்களை தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் இன்றுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுவது சகஜம்தான். ஆனால், சொந்த ஆதாயத்திற்காக முற்றிலும் தவறான செய்திகளை தொடர்ந்து பரப்பி வருவது வருந்தத்தக்க விஷயம்.
இனி, இது போன்ற கீழ்த்தரமான, விஷமத்தனமான, அனைவரையும் குழப்பும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். விஜயகாந்த் உடல்நிலை குறித்து தலைமைக் கழகம் வெளியிடும் அறிக்கையே உண்மையானது, இறுதியானது; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.