விக்ரம், சிம்பு படங்களுக்கு தடை.. நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு..!
விக்ரம், சிம்பு படங்களுக்கு தடை.. நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு..!
“4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை கொடுக்கும் வரை மற்ற படங்களில் முதலீடு செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும்” என, நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனது நடிப்பில் ‘மிஸ்டர் லோக்கல்’ எனும் படத்தை தயாரிப்பதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசினார்.
கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் படம் வெளியான நிலையில், இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுத்துவிட்டு, 4 கோடி ரூபாயை பாக்கி வைத்துள்ளார்.
அத்துடன், 11 கோடி ரூபாய்க்கான டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா, அதை வருமான வரித்துறையில் செலுத்தாததால் 2019 - 2020, 2020 - 2021-ம் ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகை 91 லட்ச ரூபாயை செலுத்த வேணடும் என எனக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து முன்னரே வழக்கு தொடர்ந்துள்ளேன்.
எனவே, 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை எனக்கு கொடுப்பதற்கும், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரித் துறையிடம் செலுத்துவதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும்.
அப்படி செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ரிபெல்’, விக்ரம் நடிக்கும் ‘சீயான் 61’, சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘பத்து தல’ ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்க வெளியீடு மற்றும் ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும்” என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நாளை மறுதினம் (31-ம் தேதி) வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.