அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை.. வடமாநிலங்களில் தொடரும் பதற்றம் !
அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை.. வடமாநிலங்களில் தொடரும் பதற்றம் !
தலைநகர் புதுடெல்லி ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது பெரும் வன்முறை வெடித்தது.
வடமாநிலங்களில் ராமநவமி திருவிழா கொண்டாடி வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்தன. பல்வேறு இடங்களில் மோதல் சம்பவங்களும், பல இடங்களில் ஒரு தரப்பினரை குறிவைத்து இந்து அமைப்பினரும் தாக்குதல் நடத்தின. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் உண்டாக்கியது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திடீரென மோதல் சம்பவம் வெடித்தது. மோதலில் ஈடுபட்டவர்கள் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீதும் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன.
இந்த சம்பவத்தில் பல வாகனங்கள் மர்மநபர்களால் அடித்து நொறுக்கப் பட்டன. கல்வீச்சில் போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இரவு முழுவதும் அங்கு பதற்றமான சூழல் நீடித்தது.
அந்த பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார். மோதல் நடைபெற்ற ஜஹாங்கீர்புரி பகுதியில் காவல்துறையினரின் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவத்துக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதி இல்லாமல் நாடு முன்னேற முடியாது என தெரிவித்துள்ள அவர், தலைநகரில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
newstm.in