நாங்கள் பின்வாங்க போவதில்லை: ரஷ்யா திட்டவட்டம் !!

நாங்கள் பின்வாங்க போவதில்லை: ரஷ்யா திட்டவட்டம் !!

Update: 2022-03-01 17:45 GMT

ரஷ்யா போரை தொடரும் எனவும், அதிலிருந்து பின்வாங்க போவதில்லை எனவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது 6ஆவது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அமைதிக்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.  

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், கடந்த வியாழன் முதல் தாக்குதலை தொடங்கியது ரஷ்யா. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஷ்யா போரில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷோய்கு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கப்படாத சூழலில், மேற்கு நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை உக்ரைன் மீது போர் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா 120 மணி நேரத்திற்கு மேலாக இடைவெளி இன்றி நடத்தி வரும் தாக்குதலால் கடுமையான உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது.

இதுவரை 350-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ரஷ்ய தாக்குதலால் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பல மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர்; அவர்களின் நிலை என்ன என்பது பற்றி கேள்விக்குறியாகவே உள்ள நிலையில் தற்போது ரஷ்யா தனது நிலைபாட்டை உறுதி பட கூறியுள்ளது.

உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிவரும் மேற்கத்திய நாடுகளின் தலையீடுகள் முழுமையாக நிறுத்தும் வரை இந்த போரானது தொடரும் என்பதை அறிவித்துள்ளார். பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகள் இத்தனை பொருளாதார தடைகள் விதித்தும், ரஷ்யா தனது நிலைப்பாட்டை உறுதியாக வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.             

newstm.in

Tags:    

Similar News