போராட்டத்தை ஆதரிக்கிறோம்.. ஆனால் வழக்கம்போல்.. அமைச்சர் சொன்ன தகவல்..!

போராட்டத்தை ஆதரிக்கிறோம்.. ஆனால் வழக்கம்போல்.. அமைச்சர் சொன்ன தகவல்..!

Update: 2022-03-26 15:45 GMT

இம்மாதம் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தின் போது பஸ்களை வழக்கம் போல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பாதிப்பு இல்லை.

தமிழக போக்குவரத்து துறை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து அந்தந்த போக்குவரத்து பணிமனைகளுக்கு முதல்வர் உத்தரவின் பேரில் நேரடியாக சில்லறை விற்பனையில் டீசல் கொள்முதல் செய்து நிரப்பப்படுகிறது.

இதனால் தமிழக அரசுக்கு மாதத்துக்கு ரூ.3½ கோடி லாபம் ஈட்டப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் அந்தந்த பெட்ரோல் நிலையங்களுக்கு பஸ்கள் சென்று டீசல் நிரப்பியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இலவச பஸ் பயண சலுகை அறிவிப்புக்கு பிறகு அரசு பஸ்களில் பெண் பயணிகள் வருகை 40 சதவீதம் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது 62 சதவீத பெண்கள் அரசு பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த திட்டம் மூலம், நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் அதிகளவு திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். தற்போதைய நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்து துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் 28 மற்றும் 29-ம் தேதிகளில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதனை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர்.

இந்த போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கும் அதே நேரத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடக்கும் 2 நாட்களும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

Similar News