டெம்போவில் சென்ற மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..!
டெம்போவில் சென்ற மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..!
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், சாமந்தான்பேட்டை, நம்பியார் நகர் மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவப் பெண்கள் 8 பேர் இன்று அதிகாலையில் டெம்போ வாகனத்தில் மீன்களை ஏற்றிக் கொண்டு வியாபாரம் செய்வதற்கு திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
கீழ்வேளூர் அருகே, குருக்கத்தி பள்ளிக்கூடம் அருகே வரும் போது வாகனத்தின் பின் பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய வாகனத்தின் அச்சு முறிந்து ஒரு புறமாக சாய்ந்து கவிழ்ந்துள்ளது.
இதில், அக்கரை பேட்டையைச் சேர்ந்த கல்பனா என்பவருக்கு தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், படுகாயம் அடைந்த 7 பெண்களை உயிருக்கு ஆபத்தான நிலையில் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.