இதை விட கொடுமை வேற என்ன இருக்கு? பாட்டில்களில் அடைத்து சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட 7 சிசுக்கள் சடலம்!!
இதை விட கொடுமை வேற என்ன இருக்கு? பாட்டில்களில் அடைத்து சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட 7 சிசுக்கள் சடலம்!!
பெலகாவி மாவட்டம் முடல்கி நகர பேருந்து நிலையம் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கண்ணாடி பாட்டில்களில் கரு கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் இருந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள், இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் முடல்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கால்வாயில் கிடந்த 5 பாட்டில்களை கைப்பற்றி விசாரணை செய்தனர். அதில், 5 முதல் 7 மாதத்தில் கருகலைப்பு செய்யப்பட்ட சிசுக்களின் உடல்களை பாட்டிகளில் அடைத்து வீசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மீட்கப்பட்ட 7 சிசுக்களின் உடல்களை முடல்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி மகேஷ் கோனி தெரிவித்துள்ளார். மேலும், 7 சிசுக்களின் உடல்களை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். இதுகுறித்து முடல்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருக்கலைப்பு செய்யப்பட்ட சிசுக்களின் உடல்களை சாக்கடை கால்வாயில் வீசியது யார்?, இந்த சம்பவத்திற்கு பின்னணியில் பெரிய கும்பல்களின் கைவரிசை உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அரபாவி எம்.எல்.ஏ. பாலச்சந்திர ஜர்கிஹோலி கூறுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் பொதுச் சமூகத்திற்கு பெருத்த அவமானம் என தெரிவித்துள்ளார்.