இலவசங்களை வாக்குறுதிகளாக வழங்குவதை தடுக்க என்ன வழி? - உச்சநீதிமன்றம் அதிரடி
இலவசங்களை வாக்குறுதிகளாக வழங்குவதை தடுக்க என்ன வழி? - உச்சநீதிமன்றம் அதிரடி;
தேர்தல் காலத்தில் அறிவிக்கப்படும் இலவசங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்திருந்தார்,
தேர்தலில் வெற்றி பெற்றால் இதைத் தருவோம், அதைத் தருவோம் என இலவசங்கள் குறித்து அரசியல் கட்சிகள் அள்ளி வீசும் அறிவிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்படி இலவசங்களை அள்ளிவிடும் அரசியல் கட்சிகளின் தேர்தல் சின்னத்தை முடக்கத் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதுவும் ஆட்சியில் தொடர வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போலத் தான் என்றும் ஜனநாயகக் கொள்கைகளைப் பாதுகாக்க இது போன்ற நடைமுறைகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகரிப்பதற்கான நிபந்தனைகளில் இதுபோன்ற இலவசங்கள் குறித்த அறிவிப்பை அறிவிக்கக் கூடாது என்பதையும் ஒரு நிபந்தனையாகச் சேர்க்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்குகளை கவர "இலவசங்கள்" என்ற வாக்குறுதியைக் கட்டுப்படுத்த வழிவகை செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், இந்த பிரச்சனைகளை தேர்தல் ஆணையம் தீர்க்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு, இலவசங்கள் தொடர வேண்டுமா வேண்டாமா என்று நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுங்கள், என தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.
பின்னர் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு வழக்குக்காக காத்திருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்-யிடம், இது குறித்து ஏதாவது பரிந்துரைக்க முடியுமா ? இந்த இலவசங்களை எப்படி கட்டுப்படுத்துவது?, என்று தலைமை நீதிபதி ரமணா அடங்கிய அமர்வு கேட்டனர். அப்போது கபில் சிபல் முன் வந்து, இலவசங்கள் ஒரு தீவிரமான பிரச்சினை என்றும், மாநில அளவில் அதைச் சமாளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
newstm.in