அரசு நிகழ்ச்சிக்கு ஏன் அழைப்பிதழ் அடிக்கவில்லை..?: எகிறிய அமைச்சரால் பரபரப்பு..!
அரசு நிகழ்ச்சிக்கு ஏன் அழைப்பிதழ் அடிக்கவில்லை..?: எகிறிய அமைச்சரால் பரபரப்பு..!
புதுச்சேரி, வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட வி.மணவெளி பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய தார்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக பாஜக அமைச்சர் சாய் சரவணக்குமார் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு கோபத்துடன் வந்த அமைச்சர் சாய் சரவணகுமார், அங்கிருந்த பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தியை பார்த்து, “ஏன் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அடிக்கவில்லை..?, இனிமேல், அரசு நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே எனக்கு தகவல் தர வேண்டும்.
அப்போதுதான் பாஜகவினரை என்னால் விழாவிற்கு அழைத்து வர முடியும். அழைப்பிதழ் அடிக்கவில்லை என்றால் இனிமேல் அரசு நிகழ்ச்சிக்கு என்னை அழைக்க வேண்டாம்” என, பொதுமக்கள் மத்தியில் சராமாரியாக திட்டினார். இதனால், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி செய்வதறியாமல் திகைத்து நின்றார்.
பொதுவாக, பூமி பூஜை போன்ற நிகழ்ச்சிகளுக்கு புதுச்சேரி அரசு சார்பில் அழைப்பிதழ் அடிப்பது நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்று விழா நடைபெற்ற பகுதி திமுகவின் தொகுதியாகும். திமுகவின் தொகுதியில் பாஜக அமைச்சர் ஒருவர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரை பொதுமக்கள் மத்தியில் சராமாரியாக திட்டி எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.