கணவருக்காக தனியாக போராடும் மனைவி.. மக்கள் நெகிழ்ச்சி.. பிரார்த்தனை !!

கணவருக்காக தனியாக போராடும் மனைவி.. மக்கள் நெகிழ்ச்சி.. பிரார்த்தனை !!

Update: 2022-04-21 13:05 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்த சிவராமன் (45) என்பவர், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்து வந்தார். இதில் அவருக்கு குறைந்த வருவாயே கிடைத்து வந்தது. இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மிகுந்த பாசத்தோடு இருந்து வந்தார். அண்மையில் இவருக்கு சிறிது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி காலை முத்தம்பட்டியிலுள்ள தனது வீட்டிலிருந்து வாழப்பாடிக்கு சென்றஅவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. தனது கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பழனியம்மாள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், கணவர் சிவராமன் குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கணவரை தேடி தானே களத்தில் இறங்குவது என அவர் முடிவு செய்தார்.

இதற்காக, ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தும், துண்டு பிரசுரங்களை வினியோகித்தும், கணவரை தேடியும் வருகிறார் பழனியம்மாள். தனியொரு பெண்ணாக ஊர் ஊராக ஆட்டோவில் சென்று, தனது கணவரின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, ஒரு வாரத்திற்கு மேலாக சரியாக உணவு கூட உண்ணாமல், கண்ணீர் மல்க பொதுமக்களிடம் காண்பித்து தேடி வருவது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தபெண்ணின் பாசத்தையும் நம்பிக்கையையும் விடா முயற்சியையும் உணர்ந்த பொதுமக்கள், கணவரான சிவராமன் கிடைக்கவேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.
 

newstm.in

Similar News