'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' சீரிஸ் படங்களில் 'கேப்டன் ஜாக் ஸ்பாரோ' என்ற கதாபாத்திரம் புகழ்பெற்றவர் நடிகர் ஜானி டெப். தனது அசாத்திய நடிப்பின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார். ஜானி டெப் தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015ஆம் ஆண்டு அவரை கரம்பிடித்தார்.

ஆனால், 15 மாதங்களில் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தது பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர். இவர்கள் பிரிந்தபிறகு மோதல் போக்கு உண்டாகி நீதிமன்றம் சென்றனர். 2018ஆம் ஆண்டில் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார் ஆம்பர் ஹேர்ட்.

பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அந்தக் கட்டுரையில், ஜானியின் பெயரை மட்டும் குறிப்பிடாமல், அவர் சொன்ன விஷயங்கள் ஹாலிவுட் உலகை அதிரவைத்தது. பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். இயற்கைக்கு மாறாக பாலியல் உறவு கொண்டதாகவும் அவர் கூறிய விதம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதனால் பல திரைப்படங்கள் ஜானி டெப் கையை விட்டுச் சென்றன. ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' படம் மட்டுமல்ல, ஜானியை 'ஜாக் ஸ்பாரோ'வாக உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்திலிருந்தும் ஜானி நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன்பின் ஜானி டெப், ஆம்பர் மீது கட்டுரைக்கு குற்றம்சாட்டி அவதூறாக ரூ.380 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்தார். தனது சினிமா வாழ்க்கையை முன்னாள் மனைவி ஆம்பர் சிதைத்து வருவதாக ஜானி டெப் தொடர்ந்த வழக்குதான் ஹாலிவுட் திரையுலகில் கடந்த சில வாரங்களாக ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

அவதூறு வழக்கு மூன்று ஆண்டுகள் முன்பு தொடங்கினாலும், கடந்த சில நாட்களாக வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதன் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளது. ஜானியின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கவும், அவதூறு பரப்பும் நோக்கத்தோடு பொய்யாக 2018-ம் ஆண்டு பிரபல பத்திரிக்கையில் ஆம்பர் கட்டுரை எழுதியுள்ளார் என நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

ஜானி மீது ஆம்பர் தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டுகளும் போலியானவை என கோர்ட்டு தெரிவித்தது. இதன் மூலம் அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும் (10 மில்லியன்), அபராதமாக 38 கோடி ரூபாயும் ( 5 மில்லியன்) என மொத்தம் 116 கோடி ரூபாய் (15 மில்லியன்) வழங்க வேண்டும் என கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஆனால், கோர்ட்டு அபராதம் விதிக்கும் உச்சபட்ச தொகை அளவு 2.71 கோடி ரூயாய் (35 ஆயிரம் டாலர்)என்பதால் அபராத தொகையான 5 மில்லியனுக்கு பதில் 35 ஆயிரம் டாலரை செலுத்த வேண்டும்.

இதன் மூலம் ஆம்பர் தனது முன்னாள் கணவர் ஜானி டெப்பிற்கு 80.31 கோடி ரூபாய் (10.35 மில்லியன் டாலர்) இழப்பீடாக கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு ஆம்பர் ஹேர்ட் கவலை தெரிவித்துள்ளார். இது பெண்களுக்கான தோல்வி என்று குறிப்பிட்டுள்ளார். 


newstm.in

Tags: