ஆளுநர் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்குமா? - ஜெயக்குமார் பதில் !!
ஆளுநர் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்குமா? - ஜெயக்குமார் பதில் !!
தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சிகளுக்கு, இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார். இதில் அனைத்து கட்சி சட்டமன்ற பிரதிநிதிகளும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஆளுநர் விருந்தை புறக்கணிப்பதாக முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது. நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது போன்ற காரணங்களை பட்டியலிட்டு, மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஆளுநர் அதிகார மையமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய அக்கட்சி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தது.
அதன் தொடர்ச்சியாக, தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைப்பது, தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாக உள்ளது; தமிழர் விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆளுநரின், தேநீர் விருந்து அழைப்பை புறக்கணிப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.
அதன்பின்னர், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆளுநர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில், இன்று காலை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் திடீரென ஆளுநரை சந்தித்தனர். பின்னர் பேசிய அவர்கள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழக அரசு பங்கேற்காது என அறிவித்தனர்.
இந்த நிலையில், ஆளுநர் தேநீர் விருந்தில் அதிமுக கலந்து கொள்ளும் என்று அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழக ஆளுநரை அமைச்சர்கள் தங்கம்தென்னரசு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று சந்தித்தனர். நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட தமிழக அரசு அனுப்பி வைத்த கோப்புகளை ஆளுநர் நிலுவையில் வைத்திருக்கும் நிலையில், அது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, நீட் விலக்கு மசோதாவில் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் முடிவு எடுக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.
தேநீர் விருந்தில் கலந்துகொள்வது சட்டமன்றத்தின் மாண்பை குழைப்பதாக இருக்கும். தமிழக சட்டசபையின் மாண்பையும் மக்களையும் தமிழ்நாடு ஆளுநர் மதிக்காததால் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாகவும் அமைசர் தங்கம் தென்னரசு அப்போது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in