எஸ்பி, கலெக்டரை மாற்றினால் சரியாகி விடுமா..?: கேட்கிறார் வைகைச் செல்வன்..!

எஸ்பி, கலெக்டரை மாற்றினால் சரியாகி விடுமா..?: கேட்கிறார் வைகைச் செல்வன்..!

Update: 2022-07-21 05:20 GMT

புதுக்கோட்டையில், கம்பன் கழகம் சார்பில் கம்பர் பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார்.

அதன்பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, புதிய இலக்கை நோக்கி அதிமுக சென்று கொண்டுள்ளது.

அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனின் கையெழுத்தை வங்கி ஏற்றுக் கொண்டுள்ளது. வங்கி உத்தரவு போன்றே தேர்தல் ஆணையமும் விரைவில் அங்கீகாரம் அளிக்கும். நிரந்தர பொதுச் செயலாளர் வேகத்தோடும் விவேகத்தோடும் மக்கள் தொண்டு ஆற்றுவதற்கு அதிமுக சென்று கொண்டுள்ளது.

உண்மையான அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தொண்டர்களால் நிரந்தர பொதுச் செயலாளராக விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அதன் பிறகும் யாராவது அதிமுக பொதுச்செயலாளர் என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் என்றும் அறிவித்துக் கொண்டால் அவர்கள் மீது பொதுச் செயலாளர் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்.

தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு வைக்கப்படும். எங்களுடன் தான் பொதுக்குழு, செயற்குழு, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி சம்பவம் வேதனைக்குரியது. உளவுத்துறை செத்துவிட்டது, காவல்துறை படுத்துவிட்டது, முதலமைச்சர் செயலிழந்துவிட்டார்.

எஸ்.பி மற்றும் கலெக்டரை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடுமா..?. மூன்று நாட்கள் பிரச்சனை கொழுந்து விட்டு எரியும் போது அதை தடுக்க தவறி விட்டது திமுக அரசு.

மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதிமுக அரசு மின் கட்டணத்தை கட்டுக்குள் வைத்திருந்தது. அதற்கே போராட்டம் செய்தார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், இன்றைய முதலமைச்சர். அவரே தற்போது மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். இது குறித்து அவர் பதில் அளிக்க வேண்டும்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஓபிஎஸ் மனம் திரும்பி வந்தால் இது குறித்து இடைக்கால பொதுச் செயலாளர் முடிவெடுப்பார்” என்று அவர் தெரிவித்தார்.

Similar News