உபியில் தமிழ் கற்றுக் கொடுப்பார்களா..?: கேட்கிறார் அன்புமணி ராமதாஸ்..!
உபியில் தமிழ் கற்றுக் கொடுப்பார்களா..?: கேட்கிறார் அன்புமணி ராமதாஸ்..!
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
அதன் பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: “ஹிந்தி கற்றுக்கொண்டால் ஒற்றுமைக்கு உதவும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள கருத்து, அதற்கு நேர் எதிரான விளைவுகளை தான் ஏற்படுத்தும்.
ஹிந்தி திணிப்பு கூடாது, ஹிந்தி தேசிய மொழி கிடையாது. அது வெறும் அலுவல் மொழிதான். அது போல, தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் உள்ளன. 2-வது அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன. அதே நேரத்தில், மும்மொழி கொள்கை என சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் உள்ளது. உத்தரபிரதேசத்தில் மும்மொழி கொள்கை வைத்திருக்கிறார்களா..? ஹிந்தியும், ஆங்கிலமும் மட்டும்தான் வைத்திருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் தமிழை கற்றுக் கொடுப்பார்களா..?
முதலில், பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் ஹிந்தி, ஆங்கிலம் தவிர கூடுதலாக வேறு ஒரு மொழியை கற்றுக்கொடுக்க சொல்லுங்கள். எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. அது ஒற்றுமைக்கு உதவாது வேற்றுமையை தான் வளர்க்கும்.
இதைத்தான் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பார்த்தார்கள். அந்த நிலை வரக்கூடாது. மொழி என்பது வெறும் மொழி கிடையாது. அதில் நமது கலாச்சாரம் பண்பாடு எல்லாம் அடங்கி இருக்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவம் இருக்கிறது. தனித்துவத்தில் மொழி என்பது முதலாவது இடத்தில் இருக்கிறது. இதில் எந்த மொழியையும் யாரிடமும் திணிக்கக் கூடாது” என்று அவர் கூறினார்.