தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வா..?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வா..?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

Update: 2022-05-17 04:55 GMT

அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணச்சீட்டு கட்டணம் உயர்த்தப்படுகிறதா என்பது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன.

கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக இன்று செய்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து இன்று என்னிடம் கேள்வி கேட்டபோது, அவ்வாறு அட்டவணை தயாராகவில்லை என்று தெரிவித்து விட்டேன்.

இரண்டு மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தம் இடும் போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகள் கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி. அப்படித் தான் பர்மிட் வழங்கப்படும்.

கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட சூழலில், அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் அந்த மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த அட்டவணையை குழப்பிக் கொண்டு, ‘தமிழகத்தில் இயங்கும் அனைத்து பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது’ என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து கழகங்களின் நிதி சூறையாடப்பட்டு, போக்குவரத்து கழகம் நிதி நெருக்கடியில் இருந்தாலும், முதல்வர் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் அரசுப் போக்குவரத்து கழகம் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில், நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற மகத்தான திட்டத்தை வழங்கி, அது சிறப்புற செயல்படுத்தப்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இன்று வரை கடந்த ஓராண்டில்,112 கோடி இலவச பயணங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கான நிதியை முதல்வர் வழங்கி வருகிறார்.

இவ்வாறு ஏழை, எளிய மக்களுக்கு பாதிக்காத வண்ணம் கட்டண உயர்வு இல்லாமல் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயங்கி வரும் சூழலில், ‘கட்டண உயர்வு அட்டவணை தயாராகி விட்டது’ என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Similar News