ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா..?: அரசு விளக்கம்..
ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா..?: அரசு விளக்கம்..
‘ரேஷனில் பொருட்கள் பெற தகுதியற்ற நபர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை ஒப்படைக்குமாறு உத்தரப் பிரதேச அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், கார்டை ஒப்படைக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று, கடந்த மே மாதம் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்த செய்தி பயனாளிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. பல மாவட்டங்களில் ரேஷன் கார்டை ஒப்படைக்க மக்கள் அலைந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது, ரேஷன் கார்டை ஒப்படைக்கவோ அல்லது ரத்து செய்யவோ எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று உத்தரப் பிரதேச அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருப்பதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று தகவல் பரவியிருந்தது. அதாவது, குடிசை வீடு, மின் இணைப்பு, ஆயுத உரிமம் வைத்திருப்பவர், மோட்டார் சைக்கிள் உரிமையாளர், கோழி/மாடு வளர்ப்பில் ஈடுபட்டிருப்பவர் போன்றவர்கள் ரேஷன் கார்டு வைத்திருக்க தகுதியற்றவர் என்று கூறப்பட்டது. ஆனால் இதை அரசு மறுத்துள்ளது.
ரேஷன் கார்டு தொடர்பாக ஊடகங்களில் பரவும் செய்திகளை உத்தரப் பிரதேச மாநில உணவுத் துறை ஆணையர் மறுத்துள்ளார். மேலும், இதுபோன்ற உத்தரவை பிறப்பித்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த சமீபத்திய உத்தரவையடுத்து, ரேஷன் கார்டில் இலவச ரேஷனை பயன்படுத்தி வந்த மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்-2013ன்படி தகுதியில்லாத கார்டுதாரர்களிடம் இருந்து ரேஷன் கார்டை திரும்ப பெற எந்த விதியும் இல்லை என்று கூறப்படுகிறது.
அரசு மட்டத்திலோ அல்லது உணவு ஆணையர் அலுவலகத்திலோ இருந்து மீட்டெடுப்பது தொடர்பாக எந்த உத்தரவும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.