தடுப்பூசியால் மாணவிகளுக்கு பாதிப்பா..?: சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்..!

தடுப்பூசியால் மாணவிகளுக்கு பாதிப்பா..?: சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்..!

Update: 2022-03-25 05:00 GMT

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 24) நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின் கேள்வி நேரத்தின்போது, “ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12 மற்றும் 9-ம் வகுப்பு படித்த மாணவிகள் லோகலட்சுமி, பிரியதர்ஷினி ஆகியோருக்கு சிறார்கள் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் லோகலட்சுமி என்பவருக்கு கண் பார்வை போய்விட்டது.


அதுபோன்று, பிரியதர்ஷினி என்பவருக்கு கை, கால்கள் செயலிழந்து விட்டது. இது, தடுப்பூசி போட்டதால் ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்று தெரியவில்லை. அவர்களின் பெற்றோர் கூலி வேலை செய்யக் கூடியவர்கள்.

அதனால், அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சமும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அதிமுக உறுப்பினர் ரவி கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தடுப்பூசி இயக்கம் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டு, கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் என இதுவரை 180 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி 10,34,28,372 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் லோகலட்சுமியும், பிப்ரவரி மாதம் பிரியதர்ஷினியும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி போட்டவுடன் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.


சிறிது நாட்கள் சென்றபின்பு லோகலட்சுமிக்கு கண்பார்வை பாதிப்பும், பிரியதர்ஷினிக்கு உடல் பலவீனம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சோளிங்கர் மருத்துவமனை, அடுத்து வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனை, வேலூர் சிஎம்சி மருத்துவமனை மற்றும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேற்கூறிய இரண்டு மாணவிகளுக்கும் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த அறிக்கையை மாவட்ட மற்றும் மாநில அளவிலான தடுப்பூசி செலுத்திய பிறகு ஏற்படும் பின்விளைவுகளை கண்காணிக்கும் குழுவிடம் அளிக்கப்பட்டது.


அக்குழு சிகிச்சை குறித்து ஆவணங்களை ஆராய்ந்து மாணவி லோகலட்சுமிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு ஏற்பட்ட பாதிப்புக்கும், தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிரியதர்ஷினிக்கு வில்லியம் பேரன் சிண்ட்ரோம் நோயாக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

இருவருக்கும் கொரோனா தடுப்பூசியால் எந்த பின்விளைவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தாலும், அவர்களின் மாதிரி, சிகிச்சை விவரங்கள் மருத்துவக் குழுவின் ஆய்வுக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வரின் வழிகாட்டுதலின்படி இரண்டு மாணவிகளுக்கும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி அடுத்த வாரம் நானும், கதர் துறை அமைச்சரும் மாணவிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சென்று பார்க்க உள்ளோம். உறுப்பினரின் கோரிக்கைப்படி மாணவிகளுக்கு எந்த விதமான அரசு உதவி தேவைப்பட்டாலும், முதல்வரின் வழிகாட்டுதல்படி செய்து தரப்படும்” என்று கூறினார்.

Similar News