ஓட்டு மிஷின் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் தற்கொலை..!

ஓட்டு மிஷின் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் தற்கொலை..!

Update: 2022-02-26 19:10 GMT

வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை அடுத்த மூஞ்சூர்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் இந்துமதி (30). இவர், வேலூர் ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர் கிருஷ்ணமூர்த்தி (35), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்தத் தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். இவர்கள், மேட்டு இடையம்பட்டியில் உள்ள மாமனார் வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். இந்துமதி மட்டும் வேலூர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் தங்கியிருந்தார்.

தற்போது, பாகாயத்தில் உள்ள தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று, குழந்தைகளை பார்த்து விட்டு இரவு 10.30 மணிக்கு ஆயுதப்படை குடியிருப்புக்கு வந்தார்.

இரவு அவர் பணிக்கு செல்லவில்லை. சக போலீசார் அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது பதில் இல்லை. இதனால் சந்தேகமடைந்த சக போலீசார், இந்துமதியின் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு, அறையின் மின் விசிறியில் இந்துமதி தூக்கு மாட்டி பிணமாக தொங்கினார். வேலூர் தெற்கு போலீசார் இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News