போலீசுக்கு லஞ்சம் கொடுக்க காசு தாங்க.. கலெக்டர் ஆபீஸ் முன்பு பிச்சை எடுத்த பெண்..!

போலீசுக்கு லஞ்சம் கொடுக்க காசு தாங்க.. கலெக்டர் ஆபீஸ் முன்பு பிச்சை எடுத்த பெண்..!

Update: 2022-06-30 12:45 GMT

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு பெண் தனது 2 மகன்களுடன் வந்தார். பின்னர் அவர் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்‌.

அப்போது அந்த சிறுவர்கள், ‘காவல்துறைக்கு கொடுக்க காசு இல்லை; உங்களால் முடிந்தததை கொடுங்கள்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த பதாகைகளை கைகளில் பிடித்தபடி நின்றனர். மேலும் அந்தப் பெண், தரையில் துண்டு விரித்து, போவோர் வருவோரிடம் காசு கேட்டுக்கொண்டிருந்தார்.


இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் பெண் பண்ருட்டி அடுத்த ஒரையூரைச் சேர்ந்த பாரதிராஜா என்பவரின் மனைவி வசந்தி என்பது தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசாரிடம் அவர் கூறுகையில், “எனக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், எனது கணவர் பாரதிராஜா வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இதுதொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது, என்னுடன் சேர்ந்து வாழ்வதாக எனது கணவர் தெரிவித்தார். இருப்பினும், தற்போது அந்தப் பெண்ணுடனே வசித்து வருகிறார்.

இதுகுறித்து மீண்டும் புகார் அளிக்க காவல் நிலையம் சென்றபோது, போலீசார் என்னிடம் பணம் கேட்டனர். அவர்களுக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லாததால், புகார் குறித்து விசாரணை நடத்தவில்லை. ஆகையால், போலீசாருக்கு பணம் கொடுப்பதற்காக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து அங்கிருந்த போலீசார், ‘இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு அளியுங்கள்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதையடுத்து வசந்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு சென்றார்.

Similar News