மகளிர் குழு கடன் தள்ளுபடி.. ரூ.600 கோடி ஒதுக்கி பணிகள் தீவிரம் !!
மகளிர் குழு கடன் தள்ளுபடி.. ரூ.600 கோடி ஒதுக்கி பணிகள் தீவிரம் !!
கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக 600 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதால் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்ட ஐந்து சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. நகைக்கடனில் பலர் முறைகேடு செய்திருந்தது தெரியவந்ததால் அரசு தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. உண்மையான பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, நகைகள் திருப்பிக் கொடுக்கும் பணி நடந்து வருகிறது.
அடுத்த கட்டமாக, மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், சங்கங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கூட்டுறவு நிறுவனங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் வழங்கப்பட்டு 2021 மார்ச் 31 வரை நிலுவையில் இருந்த கடனில் அசல் தொகை ரூ.2,459.57 கோடி, வட்டி ரூ.215.07 கோடி சேர்த்து ரூ.2,674.64 கோடியை தமிழக அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதில், நடப்பு நிதியாண்டு, 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு தமிழக அரசு கணக்கில் இருந்து தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.
இத்தொகை, மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி பயனாளிகளின் இறுதி பட்டியலை, கூட்டுறவு தணிக்கைத்துறையினரின் ஆய்வுக்கு பின்னரே தள்ளுபடி சான்றிதழ் வழங்க வேண்டும், இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, கூட்டுறவு வங்கியினர் அதற்கான பணியில் இறங்கியுள்ளனர். நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு சான்று, நகை திருப்பி வழங்கப்படுகிறது. இப்பணி முடிந்ததும், கடன் பெற்று நிலுவை வைத்திருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களின் பட்டியல் தயாரிக்கப்படும். உண்மையாகவே மகளிர் குழுக்கள் செயல்படுகிறதா என ஆய்வுக்கு உட்படுத்தப்படும். தணிக்கைத்துறை ஆய்வுக்குபின், தள்ளுபடி செய்யப்படும். இந்நிதியாண்டுக்கு, 600 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது, எனவும் கூறினார்.
newstm.in