பள்ளி, கல்லூரிகளில் யோகா.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!
பள்ளி, கல்லூரிகளில் யோகா.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் யோகா பயிற்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் 415 மாணவர்கள் கடினமான சம கோண ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்து யோகா பயிற்சி மேற்கொள்ளும் பிரமாண்ட உலக சாதனை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பி.கே.முனுசாமி என்பவர் களிமண்ணால் 30 நொடிகளில் சிலை செய்து உலக சாதனை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நீதிபதி சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
கோல்டன் புக் ஆஃப் உலக சாதனையில் இந்த சாதனை இடம் பெற்றது. இதில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் யோகா பயிற்சி நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.
அதை தற்போது அவருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். உடலையும், உள்ளத்தையும் உறுதியாக வைத்துக் கொள்ள யோகா மிகவும் அவசியம். வயது முதிர்ந்த காலத்திலும் கருணாநிதி யோகா பயிற்சியில் ஈடுபட்டார்” என்று தெரிவித்தார்.