நீங்க கூப்பிட்ட உடனே வர முடியாது.. 40 கைதிகள் ஐகோர்ட்டில் மனு தாக்கல்..!
நீங்க கூப்பிட்ட உடனே வர முடியாது.. 40 கைதிகள் ஐகோர்ட்டில் மனு தாக்கல்..!
கொரோனா பரவலை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெயிலில் இருந்த தண்டனை கைதிகள் பலர் பரோலில் விடுவிக்கப்பட்டனர். தற்போது, மாநிலத்தில் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி மாநில அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘கொரோனா பரவல் காரணமாக பரோல் அல்லது ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கைதிகள் 15 நாட்களுக்குள் சிறைக்கு திரும்ப வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
மாநில அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சுமார் 40 கைதிகள் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ‘மகாராஷ்டிர மாநில சிறைகளில் ஏற்கனவே அதிகளவில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி கைதிகளை திரும்ப அழைத்துள்ளது. மேலும், நாங்கள் தற்போது செய்கிற விவசாயம் உள்ளிட்ட பணிகளை அப்படியே விட்டு வர முடியாது.
எனவே, சிறைக்கு திரும்ப குறைந்த பட்சம் 45 நாட்களாவது அவகாசம் வேண்டும்’ எனக் கூறியுள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிதின் சாம்ரே, பன்சாரே ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் நடைபெற உள்ளது.