இனி சமூகவலைதளங்கள் மூலம் புகார் அளிக்கலாம்.. போக்குவரத்து போலீசாரின் புது முயற்சி !!

இனி சமூகவலைதளங்கள் மூலம் புகார் அளிக்கலாம்.. போக்குவரத்து போலீசாரின் புது முயற்சி !!

Update: 2022-05-01 19:40 GMT

சென்னையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளம் மூலம் புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சாலையில் போக்குவரத்து போலீசார் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் மற்றும் வழக்கும் பதிவு செய்து வருகின்றனர். எனினும் நாளுக்கு நாள் சாலையில் விதிமீறல்கள் என்பது அதிகரித்தே வருகிறது. இதனால் தற்போது ஏ.என்.பி.ஆர் போன்ற சிசிடிவி கேமராக்களை பயன்படுத்தியும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளை வைத்து உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அபராதம் வசூலிக்கப்படுகிறது. 

இருப்பினும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தற்போது அதனை தடுக்கும் பொறுப்பு மக்களிடமும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, போக்குவரத்தை ஒழுங்காக கடைபிடிக்கும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகளை தட்டிகேட்டால் சாலையிலேயே பிரச்சனை ஏற்பட்டு சில நேரங்களில் மோதிக்கொள்கின்றனர். 

இந்த நிலையில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை பார்த்தால் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் சென்னை போக்குவரத்து காவல் துறையின் Greater chennai traffic police என்ற ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட பகுதி போக்குவரத்து காவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, புகாரை விசாரித்து உடனடியாக அபராதமும் வழக்கும் பதிவு செய்கின்றனர். இந்த நடவடிக்கை மேற்கொண்டது தொடர்பாக புகார் அளித்த நபருக்கு புகைப்பட ஆதாரங்களுடன் சென்னை போக்குவரத்து காவல்துறையின் சமூக வலைதள பக்கம் மூலம் தெரிவிக்கின்றனர்.

இந்த அடிப்படையில் சென்னை போக்குவரத்து காவல்துறை ட்விட்டர், பேஸ்புக்,வாட்ஸ் அப் (9003130103) போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக போக்குவரத்து தொடர்பான பொது மக்களின் புகார்களையும், போக்குவரத்து பிரச்சினைகளையும் உடனடியாக தீர்வு அளிக்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதுவரை ஒருமாதத்தில் 330 புகார்களை சமூக வலைதளங்கள் மூலம் பெற்று போக்குவரத்து போலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுபோன்று சமூகவலைதளங்களில் பொதுமக்கள் அளித்த புகாருக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து அதற்கான ரசீதையும் புகைப்படத்தோடு போக்குவரத்து போலீசார் வெளியிட்டு வருகின்றனர்.
                                     
newstm.in

Similar News