61 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் மருத்துவ படிப்பில் சேர தகுதியானவர் இல்லை - மருத்துவ கலந்தாய்வு செயலாளர்..!!

61 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் மருத்துவ படிப்பில் சேர தகுதியானவர் இல்லை - மருத்துவ கலந்தாய்வு செயலாளர்..!!

Update: 2022-01-29 04:00 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பராம்பட்டியை சேர்ந்தவர் சிவபிரகாசம் (வயது 61). விலங்கியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், தர்மபுரி மாவட்டம் இந்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

ஆசிரியர் பணியில் ஏணியாக இருந்து பல மாணவர்களை டாக்டராக்கிய இவரது மனதுக்குள்ளும், டாக்டராக வேண்டும் என்ற வேட்கை ஆரம்பகால முதலே இருந்து வந்தது. ஆனால் அவருடைய மாணவர் பருவத்தில் நிறைவேறாத அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள தற்போதைய நீட் தேர்வு அவருக்கு உதவியது. ஆரம்ப முதலே அரசு பள்ளியில் படித்த அவர், இந்த நீட் தேர்வில் வெற்றி வாகை சூடினார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டில் அவர் 249-வது தரவரிசையில் இருக்கிறார்.

கடந்த ஆண்டில் 436 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இந்த ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்த நிலையில், தற்போது இவருக்கும் மருத்துவம் படிக்க இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இன்றைய கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக தர்மபுரியில் இருந்து சென்னை சென்றார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற கலந்தாய்வில் மருத்துவ படிப்பில் சேர சிவப்பிரகாசம் தகுதியானவர் இல்லை என்று மருத்துவ கலந்தாய்வு செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், பியுசி முடித்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடமில்லை என்றும் சட்டப்படி சிவப்பிரகாசம் மருத்துவப்படிப்பில் சேர முடியாது எனவும் மருத்துவ கலந்தாய்வு செயலாளர் தெரிவித்துள்ளார்.

Similar News