நடிப்பு மட்டுமே இவர்களின் தொழில் அல்ல..!
நடிப்பு மட்டுமே இவர்களின் தொழில் அல்ல..!
தென்னிந்திய நடிகர்களுக்கு நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்து வருகிறது. தங்கள் அபிமான நடிகர், நடிகைகளை மாநில முதல்வராக கூட ஆக்கி அழகு பார்த்திருக்கின்றனர் என்றால் எந்தளவு நடிகர்களை நேசிக்கின்றனர் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
நடிகர்களுக்கு நடிப்பு மட்டுமே தொழிலாக இருப்பதில்லை; சிலர், நடிப்பை கடந்து தங்களுக்கு பிடித்தமான வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் முதல் நடிகை டாப்ஸி வரை நடிப்புத் தொழில் தவிர்த்து என்னென்ன தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை தெரிந்து கொள்வோம்.
விஜய் :
இளைய தளபதி என அழைக்கப்பட்டு தற்போது தளபதியாக உயர்ந்திருப்பவர் நடிகர் விஜய். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான நடிகராக இருப்பதால், ஒவ்வொரு வீட்டிலும் இவருக்கு ஒரு ரசிகர் இருக்கவே செய்வார்கள். பிளாக் பஸ்டர் நாயகனான விஜய் பல தொழில்களை நடத்தி வருகிறார். குறிப்பாக, சென்னையில் இவருடைய தாயார் ஷோபா, மகன் சஞ்சய், மனைவி சங்கீதா பெயர்களில் பல திருமண மண்டபங்களை நடிகர் விஜய் நிர்வகித்து வருகிறார்.
ராம் சரண் :
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், தென்னிந்தியாவின் பிரபல திரைக்குடும்பத்தில் இருந்து வந்தவர். சென்னையில் பிறந்தவரான ராம் சரண், ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் TruJet என்ற விமான நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இதுதவிர, ஹைதராபாத் பொலோ மற்றும் ரைடிங் கிளப்பையும் நடத்தி வருகிறார்.
தமன்னா :
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலுமே பிஸியான நடிகையாக இருந்து வரும் தமன்னா, 15 வயதிலேயே நடிப்புத் துறைக்குள் வந்துவிட்டார். இவர் ஆன்லைனில் ஜூவல்லரி பிராண்டான Wite-n-Gold என்பதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
ஷ்ருதி ஹாசன் :
தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக விளங்கி வரும் நடிகர் கமலின் மகளான ஷ்ருதி ஹாசன், Isidro என்ற புரொடக்ஷன் ஹவுசை நிர்வகித்து வருகிறார். குறும்படங்கள், அனிமேஷன் படங்கள் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் பணிகள் இந்த புரொடக்ஷன் ஹவுஸில் நடைபெறுகின்றன.
டாப்ஸி பன்னு :
தனுஷின் ‘ஆடுகளம்’ முலம் தமிழில் அறியப்படும் நடிகையாக உயர்ந்த டாப்ஸி பன்னு, அவருடைய சகோதரி ஷாகன் மற்றும் ஃபாரா பர்வேஷ் ஆகியோருடன் இணைந்து Wedding Factory என்ற திருமண ஏற்பாட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நாகார்ஜூனா :
தெலுங்கின் முன்னணி நடிகராக திகழும் நாகார்ஜூனா என்னற்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். N Grill, N Asian போன்ற ரெஸ்டாரண்ட்களின் நிறுவனர்களுள் ஒருவராகவும், N என்ற Convention centre-ஐயும் நடத்தி வருகிறார். மேலும், ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ரெஸ்டோ பார் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
ஆர்யா :
தென்னிந்திய உணவு வகைகளைத் தரும் ரெஸ்டாரண்டான sea shell-ன் உரிமையாளராக விளங்கும் நடிகர் ஆர்யா, The show people என்ற புரொடக்ஷன் ஹவுசையும் நடத்தி வருகிறார். சில வெற்றிப்படங்களையும் இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.
ரானா டகுபதி :
‘பாகுபலி’ நடிகரான டகுபதி, திரைப்படங்கள் தவிர்த்து CAA KWAN என்ற மனித வள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நிக்கி கல்ராணி :
‘டார்லிங்’, ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற நிக்கி கல்ராணி பெங்களூருவின் கோரமங்களா பகுதியில் ரெஸ்டோ காஃபி பார் ஒன்றை நடத்தி வருகிறார்.
பிரசாந்த் :
‘ஜீன்ஸ்’ படத்தில் நடிகை ஐஸ்வர்யாவுடன் நடித்து புகழ்பெற்ற நடிகர் பிரசாந்த், இந்தியாவின் மிகப்பெரிய ஜூவல்லரி மால் ஒன்றை தி-நகரின் பனகல் பார்க் பகுதியில் நிறுவியுள்ளார்.