ஒரு வீட்டில் ஒரு பெயரில் பல மின் இணைப்புகள் இருந்தால் நடவடிக்கை!!
ஒரு வீட்டில் ஒரு பெயரில் பல மின் இணைப்புகள் இருந்தால் நடவடிக்கை!!
ஒரே பெயரில் ஒரே வளாகத்தில் பல மின் இணைப்புகள் இருப்பது தெரியவந்தால் பொறுப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பலமுறை அறிவுறுத்தியும் ஒரு வளாகத்தில் ஒரு பெயரின் கீழ் பல இணைப்புகள் சட்டவிரோதமாக வழங்குவது தொடர்ந்து கொண்டே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வளாகத்தில் ஒரே பெயரின் கீழ் உள்ள தாழ்வழுத்த (எல்டிசிடி) மின் இணைப்புகள் குறித்து தொடர் ஆய்வுகளை நடத்துமாறு, பகிர்மானப் பிரிவு தலைமைப் பொறியாளர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெற்ற இணைப்பை ஒருங்கிணைக்காமலும், உயரழுத்த இணைப்பாக மாற்றாமலும் உள்ள நுகர்வோருக்கு 3 மாத அவகாசம் வழங்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான உயரதிகாரிகளின் ஆய்வின் போது, பல இணைப்புகள் ஒரே பெயரின் கீழ் ஒரே வளாகத்தில் இருப்பது தெரியவந்தால் பொறுப்பு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடியிருப்பிலும் எத்தனை இணைப்புகள் கொடுக்கப்பட்டது என கணக்கெடுப்பதோடு, குளிர்சாதன கருவி, குடிநீர் விநியோகம், பொது இடங்களில் பயன்படுத்தும் மின் விளக்குகள், தடையற்ற மின்விநியோகம் செய்யும் கருவி உள்ளிட்டவற்றுக்கு ஒரே வளாகத்துக்குள் தனி இணைப்பு கண்டிப்பாக வழங்கக் கூடாது.
அதுமட்டுமின்றி,அனைத்து மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது, 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு முரணாக இணைப்பு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளதாகவும் மின்வாரியம் கூறியுள்ளது.
அங்குள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தணிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டு, அனைத்துத் தலைமைப் பொறியாளர்களுக்கு, வணிகப் பிரிவு தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
newstm.in