அதிரடி விலை குறைப்பு.. இனி ஒரு கிலோ 3 ரூபாய்தான்.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!
அதிரடி விலை குறைப்பு.. இனி ஒரு கிலோ 3 ரூபாய்தான்.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!
சென்னை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் உரம் இதுவரை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, தமிழக கூட்டுறவு விற்பனை இணையத்துடன் இணைந்து கிலோ மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. இதில், 10 மண்டலங்களின் குப்பைகளை கையாளும் பணியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஐந்து மண்டலங்களில் மாநகராட்சி நேரடியாக இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளில் 19 ஆயிரத்து 618 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 6,117 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தினசரி 5,200 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில், 50 சதவீதம் மக்கும் குப்பையும், 50 சதவீதம் மக்காத குப்பையும் கிடைக்கிறது. மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க, 208 உரம் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில், தினசரி 450 டன் மக்கும் கழிவுகள் பதனிடப்பட்டு உரமாக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் உரம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், குப்பையில்லா மாநகராட்சியை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு விற்பனை இணையம் வாயிலாக, ஒரு கிலோ உரம் மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம், சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலன் அடைவதுடன், உரம் விற்பனையை அதிகரிப்பதன் மூலம் சென்னையை குப்பையில்லா மாநகராட்சியாக மாற்ற முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.