நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி.. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடார் கைது..!
நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி.. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடார் கைது..!
கடந்த 2020-ம் ஆண்டு, நடிகை விஜயலட்சுமி தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். அப்போது திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் மற்றும் சதா ஆகியோர் தன்னை மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறியிருந்தார். இதையடுத்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஏற்கெனவே பண மோசடி வழக்கு ஒன்றில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை, திருவான்மியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
விஜயலட்சுமி தற்கொலை வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை கைதுசெய்ய அனுமதிக்கக் கோரி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு, திருவான்மியூர் ஆய்வாளர் கடிதம் எழுதி இருந்த நிலையில், தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து சைதாப்பேட்டை 18-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஹரி நாடாரை திருவான்மியூர் போலீசார் நாளை (20ம் தேதி) ஆஜர்படுத்த உள்ளனர்.