ஆப்கான் மக்கள் இனி இ-விசா மூலம் மட்டுமே இந்தியாவுக்கு வர வேண்டும் - ஒன்றிய அரசு
ஆப்கான் மக்கள் இனி இ-விசா மூலம் மட்டுமே இந்தியாவுக்கு வர வேண்டும் - ஒன்றிய அரசு
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளன. மேலும், ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை தாலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ளன.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் சிக்கியுள்ள தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த மீட்பு நடவடிக்கைகளுக்காக காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.
இந்நிலையில், இந்திய விமானப்படை விமானம் தொடர்ந்து அங்கிருந்து இந்தியர்களை மீட்டுகும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த விமானத்தில் இந்தியர்கள் அல்லாமல் ஆப்கானை சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அந்நாட்டு மக்கள் அதிகமான அளவு இந்தியாவுக்கு வர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் இ-விசா மூலம் மட்டுமே இந்தியாவுக்கு வர வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா வர விரும்பும் ஆப்கானிஸ்தானிய மக்கள் www.indianvisaonline.gov.in என்ற இணையதளத்தில் இ-விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.