ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 90-ஆக அதிகரிப்பு.. அமெரிக்க வீரர்கள் பலிக்கு அதிபர் கடும் எச்சரிக்கை !!
ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 90-ஆக அதிகரிப்பு.. அமெரிக்க வீரர்கள் பலிக்கு அதிபர் கடும் எச்சரிக்கை !!
ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டினரும் உள்நாட்டு மக்களும் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். காபூல் விமான நிலையம் தற்போது வெளிநாட்டு ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் வெளிநாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளுர், வெளிநாட்டு மக்கள் அங்கு தஞ்சமடைந்துள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் சிறப்பு விமானம் மூலம் காபூலில் உள்ளவர்களை மீட்டு வருகின்றன. காபூல் விமான நிலையத்துக்கு வெளியில் உள்ள பகுதிகள் முழுவதும் தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ளதால், விமான நிலையங்களுக்குள் பொதுமக்கள் நுழையாதபடி தாலிபான்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
காபூல் விமான நிலையம் அருகே தீவிரவாத தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் இருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன் ஏற்கனவே தெரிவித்தார். இதேபோன்ற தகவலை பிரிட்டனும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்தின் வெளியில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு நடைபெற்ற நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்கப் படைகளைச் சேர்ந்த 13 கொல்லப்பட்டுள்ளனர் என்று தொடக்க நிலையில் அடையாளம் காணப்பட்டது. தற்போது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தற்போது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 150 பேர் குண்டு வெடிப்பால் காயமடைந்துள்ளனர். அதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. அமெரிக்க ராணுவத்துக்கான மொழிபெயர்பாளர்கள், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து பணியாற்றுபவர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தலிபான்களை ஏற்கலாமா என சில நாடுகள் ஆலோசித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இனிடையே தாக்குதலுக்கு காரணமானவர்களை வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
newstm.in