குழப்பத்தில் அதிமுக.. பாஜகவின் டெல்லி உத்தரவால் பதுங்கல்?- இன்று இறுதி பெறுகிறது பங்கீடு !

குழப்பத்தில் அதிமுக.. பாஜகவின் டெல்லி உத்தரவால் பதுங்கல்?- இன்று இறுதி பெறுகிறது பங்கீடு !

Update: 2022-01-30 10:15 GMT

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி குழப்பம் நிலவி வரும் சூழலில், இப்போது தேர்தல் காரணமாக பாஜகவும் நெருக்கடி கொடுத்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே அதிமுக, பாஜகவின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதாக அரசியல் விமர்சகர்களும் பத்திரிகையாளர்களும் கூறத்தொடங்கினர். 

அதன்பின்னர் சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. இதற்கு பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஒரு காரணம் என மற்றவர்கள் கூறினாலும் கூட, அதிமுகவிலேயே இக்குரல் எழுந்தது. எனினும் எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் இதனை கண்டுகொள்வதாக தெரியவில்லை. போதாததுக்கு அதிமுக மற்றும் அதிமுக தலைவர்கள் குறித்து பாஜக தலைவர்கள் கூறும் கருத்துகள் வேறு. அதிலும் நயினார் நாகேந்திரன் அண்மையில் கூறிய கருத்துதான் உச்சம். இதற்கு அதிமுகவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதிமுக தலைமையில் இருந்து எவ்வித கண்டனமும் எழவில்லை. இதுவே அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் அதிமுகவை அதன் கூட்டணி கட்சியான பாஜக, மீண்டும் மட்டம் தட்டிவருவதாக கட்சி தொண்டர்கள் தவித்து வருகின்றனர். இனியும் கூட்டணியில் பாஜகவை வைத்துக்கொள்வது நல்லது இல்லை என்ற வகையில் தமிழகம் முழுவதும் எதிர்ப்பு குரல் வலுத்துள்ளதால் அதிமுகவில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.

 அதே சமயம், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை விரட்ட வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதை ஆமோதிக்கும் வகையில் அதிமுக தலைமை யோசிக்க தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தலுக்கான முதற்கட்ட இடபங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. மூன்று மணிநேரம் பேச்சுவார்த்தை நடந்தும் அங்கு இருதரப்பும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, பாஜக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உடனே சீட் ஒதுக்குமாறு, டெல்லி மூலம் உத்தரவு பிறப்பிக்க செய்து அதிமுகவை தெறிக்க விட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் பறக்கின்றன. டெல்லி உத்தரவை மீறி ஒன்றுமே செய்ய முடியாது என்பது ஓபிஎஸ், எடப்பாடிக்கு நன்றாக தெரியும். எனவே பாஜ திருப்திப்படுத்தும் வகையில் சீட்டுகளை ஒதுக்க அதிமுக மேலிடம் பணிகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் இன்று இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், பாவம் அதிமுக தொண்டர்கள் தான்..  

newstm.in 

Similar News