நயினார் பேச்சுக்காக எடப்பாடியிடம் வருத்தம் தெரிவித்தார் அண்ணாமலை..!
நயினார் பேச்சுக்காக எடப்பாடியிடம் வருத்தம் தெரிவித்தார் அண்ணாமலை..!
தஞ்சை பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் ஹெச்.ராஜா, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தின்போது பேசிய நயினார் நாகேந்திரன், “சட்டமன்றத்தில் தைரியமாக ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவரை கூட பார்க்க முடியவில்லை” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சுக்கு அதிமுக தரப்பில் இருந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பானதைத் தொடர்ந்து உடனடியாக நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிமுகவைப் பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் கூறியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்” என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து பாஜகவின் நிலைப்பாடு இல்லை எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.