ஓபிஎஸ், ஈபிஎஸ் வாகனம் மீது தாக்குதல் – அமமுகவினர் மீது வழக்குப்பதிவு!!
ஓபிஎஸ், ஈபிஎஸ் வாகனம் மீது தாக்குதல் – அமமுகவினர் மீது வழக்குப்பதிவு!!
சென்னையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரின் வாகனங்களை மறித்து தாக்குதல் நடத்தியதாக அமமுகவினர் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மாறன் என்பவர் அதிமுக அம்மா பேரவை துணை செயலாளராக உள்ளார். இவர் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் காமராஜர் சாலைக்கு வந்தனர். அப்போது தானும் மலரஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினேன்.
அப்போது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தூண்டுதலின் பேரில், அமமுக பொறுப்பாளர்கள் மற்றும் சிலர் சட்ட விரோதமாக கையில் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்துவதற்காக ஓபிஎஸ், ஈபிஎஸ் வாகனங்களை மறித்து முற்றுகையிட்டனர்.
மிகவும் மோசமான வார்த்தைகளால் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் பெயர்களைச் சொல்லி, கூச்சலிட்டு ஆவேசமுடன் முழக்கமிட்டுக் கொண்டே கற்களையும், காலணிகளையும், கட்டைகளையும், கம்புகளையும் கொலை வெறியோடு வீசினார்கள்.
அதில், சில கற்களும், செருப்புகளும், கட்டைகளும் என் மேல் விழுந்தது. அதில், எனக்கு இடது தோல் பட்டையில் காயம் ஏற்பட்டது. என்னுடன் வந்த செங்கல்பட்டு மேற்கு எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ராஜப்பா அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
எனவே, மேற்படி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, சதித் திட்டம் தீட்டி, பயங்கர ஆயுதங்களுடன் ஒன்று கூடி, ஆபாச வார்த்தைகளுடனும், ஆவேசமாக கொலைவெறி தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. இன்றைய தினம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த தமிழக காவல்துறையினருக்கே இந்த உண்மை தெரியும்.(4/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 5, 2021
அமமுகவினர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விட்டரில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தங்கள் இயக்கம் ஜனநாயக ரீதியாக அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எப்போதும் நம்பிக்கை கிடையாது என பதிவிட்டார்.
இந்நிலையில் அதிமுக பிரமுகரின் புகாரின் அடிப்படையில், அமமுகவைச் சேர்ந்த பெயர் தெரியாத நபர்கள் மீது, ஆபாசமாக திட்டுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல், காயம் ஏற்படுத்துதல், மிரட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
newstm.in