தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 26 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப் பட்டுள்ளன.
சிதம்பரம் வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. 23 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல்29 ம் தேதியான நாளை குடமுழுக்கு விழா நடத்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது.

தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது.

இதனை முன்னிட்டு அப்பகுதியில் கூட்டம் கூடுவதை தடுக்க நாளை ஒரு நாள் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த தடை உத்தரவு ஏப்ரல் 29 அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமுலில் உள்ளதால் நாளை அதிகாலை தொடங்கும் 144 தடை உத்தரவு 30 ம்தேதி அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நேரத்தில் பால், மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கோவிலை சுற்றி நான்கு வீதிகள், மட வளாகங்கள் மற்றும் சுவாமி சன்னதி தெருவில் 5 அல்லது ஐந்துக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவுதலை தடுக்கும் நோக்கிலும் பொது சுகாதாரம், பொதுநலன் , பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags: