குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் குழந்தை, 3 பெண்கள் உள்பட 6 பேர் பயணம் செய்தனர்.

குண்டல் தாலுகா பிலியலா கிராமம் அருகே சென்றபோது, காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது மோதி சாலையின் மறுபுறம் சென்றது.

அப்போது, சாலையின் மறுபுறம் வேகமாக வந்து கொண்டிருந்த அரசு பஸ் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 3 பெண்கள், 2 ஆண்கள் என 5 பேர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில், காரில் பயணித்த 9 வயது குழந்தை படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டது. அந்த குழந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், விபத்தில் படுகாயமடைந்த அந்த குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இந்த விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்தவர்களில் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags: