திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு தடை..!

திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு தடை..!

Update: 2021-12-28 11:56 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் 31ம் தேதி திருப்படித் திருவிழா, ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு விழா ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்தியா, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது . அதன்படி, டிசம்பர் 31ம் தேதி காலை வழக்கம்போல் திருப்படித் திருவிழா சரவண பொய்கை திருக்குளம் அருகில் முதல் படிக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கும்.

அன்று காலை 11 மணிக்கு மலைக் கோயில் மாட வீதியில் உற்சவர் தங்கத்தேர் பவனி நடைபெறும். டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறப்பின்போது சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் மலைக் கோயிலில் கூடுவார்கள்.

இதனால், நள்ளிரவு பூஜைகளுக்கு தடை செய்து வழக்கம் போல் ஜனவரி 1ம் தேதி அதிகாலை திருக்கோயில் திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News