கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார் பசவராஜ் பொம்மை..!
கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார் பசவராஜ் பொம்மை..!
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கர்நாடகத்தில் பாஜக அரசு பதவியேற்று கடந்த 26-ந் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், எடியூரப்பா அம்மாநில ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அடுத்த முதல்வரை தேர்வு செய்ய பாஜக மேலிட பார்வையாளர்களாக அனுப்பிவைக்கப்பட்ட ஒன்றிய அமைச்சர்களான தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர் அம்மாநில பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இதனை எடியூரப்பா அறிவித்தார். அதன் பிறகு பசவராஜ் பொம்மை மேடைக்கு வந்து எடியூரப்பாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் பசவராஜ் பொம்மை ராஜ்பவனுக்கு சென்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினார்.
இதையடுத்து இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கர்நாடகத்தின் 23-வது முதல்வராக பசவராஜ் பொம்மை பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் கலந்துகொண்டு பசவராஜ் பொம்மைக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.