மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு பலன்.. முக்கிய நேரத்தில் தமிழ்நாட்டுக்கு கைகொடுத்த நெதர்லாந்த் !
மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு பலன்.. முக்கிய நேரத்தில் தமிழ்நாட்டுக்கு கைகொடுத்த நெதர்லாந்த் !
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ஆவது அலை கணிக்கமுடியாத அளவுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த முறை உருமாறிய கொரோனா பரவியதே இத்தனை கொடுமைகளுக்கும் பாதிப்புகளுக்கும் காரணம் என கூறப்படுகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. அடுத்ததாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி மருந்தை மாநில அரசே கொள்முதல் செய்து போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது.
எனவே மாநில அரசுகள் தடுப்பூசி கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழ்நாட்டிலும் இவ்வாறு மருந்துகளை கொள்முதல் செய்து இலவசமாக ஊசி போடப்பட இருக்கிறது. இதற்காக உலகளாவிய டெண்டர் விடப்பட்டு ஜுன் 5ஆம் தேதி டெண்டர் திறக்கப்பட உள்ளது. பின்னர் உரிய நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்யப்படும்.
இதே போல் தமிழ் நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கும் வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்ய ஏற்பாடு நடந்தது. அந்த வகையில் நெதர்லாந்து நாடு ஆக்சிஜனை தமிழ்நாட்டுக்கு அனுப்பி உள்ளது. நெதர்லாந்தில் இருந்து இந்திய ஏர்போர்ஸ் விமானம் மூலமாக ஆக்சிஜன் சென்னை வந்தடைந்து இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4 கிரயோஜெனிக் கண்டெய்னர் மூலமாக தமிழகத்திற்கு ஆக்சிஜன் வந்திருப்பதாக கூறி உள்ளார். மேலும் சிங்கப்பூரில் இருந்து 500 சிலிண்டர் ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் கூறினார்.
அடுத்த 2 வாரத்தில் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை 840 மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று கணிக்கிடப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு குறைந்தபட்சம் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
newstm.in