லட்சத்தீவில் மத்திய அரசின் புதிய விதிகளுக்கு பாஜக தலைவர் எதிர்ப்பு..!

லட்சத்தீவில் மத்திய அரசின் புதிய விதிகளுக்கு பாஜக தலைவர் எதிர்ப்பு..!

Update: 2021-05-27 12:18 GMT

மத்திய அரசின் புதிய விதிமுறைகள் லட்சத்தீவு மக்களை பாதிப்பதாக தெரிவித்துள்ள பாஜக தலைவர் முகமது காசிம், இதுதொடர்பாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் அரபிக்கடலில் இருக்கும் லட்சத்தீவுகள் இந்திய பெருங்கடலில் ஆபரணமாக திகழ்கின்றன. இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக இந்த தீவில் சுமார் 65 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். மலையாளம் பிரதான மொழியாக உள்ளது. அதை தொடர்ந்து ஆங்கிலம் மற்றும் இந்தியும் இங்கு பேசப்படுகிறது.

முன்னதாக லட்சத்தீவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நிர்வாகம் செய்து வந்தனர். ஆனால் இந்த நிலை மாறி தற்போது முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக-வை சேர்ந்தவருமான பிரஃபுல் படேல் நிர்வாகியாக உள்ளார். மாட்டிறைச்சிக்கு தடை, பள்ளிகளில் அசைவ உணவுக்கு தடை, மதுபான விற்பனைக்கு அனுமதி, தனக்கு சாதகமான அரசு ஊழியர்களை நியமித்து வருவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதனால் பிரஃபுல் படேல் மக்கள் விரோதபோக்கில் ஈடுபட்டு வருவதாக லட்சத்தீவில் குரல்கள் வலுத்து வருகின்றன. அதன் அடுத்த நடவடிக்கையால லட்சத்தீவில் நடந்து வரும் மக்கள் விரோதபோக்கை எதிர்க்கும் வகையில் #SaveLakshadweep என்கிற ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக  கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் ப்ரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் மத்திய அரசுக்கு கண்டம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் லட்சத்தீவு பாஜக கட்சியின் தலைவரான முகமது காசிம் மத்திய அரசின் புதிய விதிமுறைகள் இங்குள்ள மக்களை பாதிப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். மக்களை வருத்தப்படுத்தும் விதிகளை அகற்ற விரும்புவதாக தெரிவித்துள்ள அவர், இதுதொடர்பாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறியுள்ளார்.


 

Tags:    

Similar News