குடியிருப்பில் வசிப்போரின் வாடகையை வாரியம் ஏற்கும்!!

குடியிருப்பில் வசிப்போரின் வாடகையை வாரியம் ஏற்கும்!!

Update: 2021-12-20 09:15 GMT

கோவை சிங்காநல்லூர் வீட்டு வசதி  வாரிய குடியிருப்பில் உள்ள மக்கள் வேறு பகுதிக்கு சென்றால் அவர்களுடைய வாடகையை வீட்டு வசதி வாரியமே ஏற்கும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே ஹவுசிங் யூனிட்டில் 960 வீடுகள் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அந்த வீடுகள் தற்போது, இடிந்து விழும் நிலையில் உள்ளன.

இதற்கிடையே, இந்த வீட்டின் உரிமையாளர்கள் புதிய வீடுகள் கட்டித்தர அரசிற்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், மோசமான நிலையில் உள்ள இந்த அடுக்குமாடி வீடுகளை தமிழக வீட்டு வசதிவாரியத்துறை அமைச்சர் முத்துச்சாமி ஏற்கனவே ஆய்வு செய்தார்.

மேலும், இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி, அவரின் ஆலோசனைபடி புதிய வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. குடியிருப்பு உரிமையாளர்களிடம் பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு, இவர்களது இடத்தில் தரமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வீட்டு உரிமையாளர்களிடத்தில் கருத்துகளும் கேட்கப்பட்டது. இந்நிலையில்  சிங்காநல்லூர்  ஹவுசிங் யூனிட் அடுக்குமாடி வீடுகள் நேரில் ஆய்வு செய்த வீட்டு வசதிவாரியத்துறை அமைச்சர் முத்துசாமி, இங்கு அமைய உள்ள புதிய அடுக்குமாடி வீடு தொடர்பாகவும், மக்களிடம் கருத்துக்களை கேட்டு, அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் மிகவும் தரமாக இருக்கும் அனைத்து விதமான அடிப்படை வசதிகள் மற்றும் பொதுவான வசதிகள் என அனைத்தும் ஏற்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தற்போது குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும் வீடுகள் அனைத்தும் உறுதியாக தரமானதாக இருக்கும் என்றும், சிங்காநல்லூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள மக்கள் வேறு பகுதிகளுக்கு வாடகைக்கு சென்றால் அவர்களுடைய வாடகையை குடிசை மாற்று வாரியமே ஏற்றுக்கொள்ளும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

Similar News