#BREAKING:- ‘பறக்கும் சீக்கியர்’ கொரோனாவுக்கு பலி : தலைவர்கள் இரங்கல்..!
#BREAKING:- ‘பறக்கும் சீக்கியர்’ கொரோனாவுக்கு பலி : தலைவர்கள் இரங்கல்..!
தடகள உலகில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர் மில்கா சிங். ‘பறக்கும் சீக்கியர்’ என்று அழைக்கப்பட்ட இவர், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 91.
1929ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள கோவிந்த்புரா என்ற பகுதியில் பிறந்தவர் மில்கா சிங். இந்திய சுதந்திர போராட்டத்தின்போது ஏற்பட்ட பிரிவினையில் டில்லிக்கு குடிபெயர்ந்த மில்காவுக்கு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. இதற்காக மூன்று முறை முயற்சி செய்துள்ளார். எனினும் இவருடைய உடல் அமைப்பு சரியாக இல்லை என்று கூறி மூன்று முறையும் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
நான்காவது முறையாக முயற்சி செய்த மில்கா தேர்ச்சி பெற்றார். அவருக்கு, செகந்திராபாத் பகுதியில் ராணுவத்தின் மின்சாரப் பிரிவில் பணி வழங்கப்பட்டது. அங்கு, தினசரி பயிற்சியாக ராணுவ வீரர்கள் நீண்ட தூரம் ஓட வைக்கப்பட்டனர். அப்போது, மில்கா சிங்கின் ஓட்டத்தைப் பார்த்த அதிகாரிகள் வியந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவரை தடகள பயிற்சியில் களமிறக்கியுள்ளனர். 1956ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் முதன்முறையாக இந்தியா சார்பில் 400 மீட்டர் தடகள ஓட்டத்தில் மில்கா சிங் பங்கேற்றார். 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனைப் படைத்த மில்கா சிங், ஆசிய அளவிலும் பெரிய சாதனையைப் படைத்தார்.
1958ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். இந்தப் போட்டிக்கு ஒரு மாதத்திற்கு பிறகு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் 46.6 விநாடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்று சாதனைப் படைத்தார்.
ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற மில்கா சிங் 1960ம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அதில், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார். இந்தப் போட்டியில் சிறப்பான ஓட்டத்தை வெளிப்படுத்திய மில்கா சிங், நூலிழையில் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
அன்று முதல் இன்று வரை, ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் வேறு எந்த இந்திய வீரரும் அந்த அளவு சிறப்பாக ஓட வில்லை. மில்கா 4வது இடத்தைப் பிடித்திருந்தாலும், இந்தியாவில் பலர் தடகளத்தை தேர்வு செய்ய அந்த ஓட்டம் முக்கிய தூண்டுகோளாக அமைந்தது.
1960ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்க வாய்ப்பை தவறவிட்டிருந்தாலும், அதிலிருந்து மீண்டு வந்து ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்றார். இந்த முறை 400 மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் அசத்திய மில்கா சிங் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று அதிலும் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய தடகள வரலாற்றில் 4 தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சதனையை படைத்தார்.
தனது ஓய்விற்கு பிறகு பல இளம் வீரர்களை ஊக்குவித்து வந்த மில்கா சிங், 1999ம் ஆண்டு கார்கில் போரில் உயிரிழந்த பிக்ரம் சிங்கின் மகனை தத்தெடுத்து, அவருடைய படிப்பு செலவுகளை ஏற்றார். 2003ம் ஆண்டு ஒரு அறக்கட்டளையை தொடங்கி, பல விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்களுக்கு உதவிகள் செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மில்கா சிங், பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த மாத தொடக்கத்தில் மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்தது.
இதையடுத்து, சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிர்மல் கவுர், இந்திய மகளிர் வாலிபால் அணியின் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மில்கா சிங்கின் தடகளப் பயணம் ‘பாக் மில்கா பாக்’ (ஓடு மில்கா ஓடு) என்ற பெயரில் ஹிந்தியில் படமாக்கப்பட்டது. மில்கா சிங் நம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவரின் சாதனை எப்போதும் போற்றும் வகையில் அமைந்துள்ளது.
‘இந்தியாவின் பறக்கும் மனிதர்’ என புகழப்படும் மில்கா சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.