லஞ்சம்.. துணை ஆட்சியர் கைது!! ரூ.80 லட்சம்.. சொத்து ஆவணங்கள் பறிமுதல்!! லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
மடக்கி பிடித்து துணை ஆட்சியர் கைது!! ரூ.80 லட்சம்.. சொத்து ஆவணங்கள் பறிமுதல்!! லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகேயுள்ள இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். விவசாயியான இவர் தனது முன்னோரின் பூர்வீக விவசாய நிலத்தை கடந்தாண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி தனது பெயருக்கு கிரயம் செய்துள்ளார். இந்நிலையில், நிலத்தை கிரயம் செய்வதற்கான முத்திரைத்தாளை காட்டிலும், அவர் குறைவான கட்டணத்தை செலுத்தியதாக தெரிகிறது. இது குறித்து விசாரிக்க வேலூர், திருவண்ணாமலை தனித்துணை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) அலுவலகத்துக்கு கடந்த மாதம் 9ஆம் தேதி கண்ணமங்கலம் சார்பதிவாளர் பரிந்துரை செய்தார்.
இந்நிலையில் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட தனித்துணை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) தினகரன் (47) என்பவர், 'உங்கள் நிலத்தின் மதிப்புக்கு 1.25 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால், குறைந்த மதிப்பில் பணம் செலுத்தியிருப்பதால் கிரயம் செல்லாது. எனவே, நிலுவை கட்டணத்தை செலுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், தனித்துணை ஆட்சியர் தினகரன், கடந்த வாரம் மாவட்ட ஆய்வு குழு அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால், ரஞ்சித் குமாரை போனில் தொடர்பு கொண்டு, 'உடனடியாக 50 ஆயிரம் கொடுத்தால், முத்திரை கட்டணத்தை குறைத்து மதிப்பிடுகிறேன். நான் பணியிட மாறுதலில் செல்வதால், உடனடியாக பணத்துடன் வரவேண்டும். இல்லாவிட்டால், உங்கள் கிரயம் கடைசி வரை செல்லாமல் போய்விடும்,' என்று கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் ரஞ்சித் குமார் புகார் கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், ரசாயனம் தடவிய பணத்தை ரஞ்சித் குமாரிடம் கொடுத்து அதனைத் தினகரனிடம் கொடுக்க கூறியுள்ளனர். அதன்படியே ரஞ்சித் குமாரும் அந்தப் பணத்துடன் நேற்று இரவு செல்ல, தனி துணை ஆட்சியர் தினகரன் தனது காரில் வைத்து பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். மேலும் வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே ரஞ்சித் குமார் இறக்கி விட்டு தினகரன் புறப்பட்டார். அப்போது, அவரை 3 கார்களில் பின்தொடர்ந்து வந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தேவநாதன், இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜினி, மைதிலி, எஸ்ஐ தினேஷ் குமார் உட்பட 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தினகரனை கையும் களவுமாக பிடிக்க முயன்றனர். ஆனால், யாரோ பின் தொடர்வதை அறிந்து கொண்ட தினகரன், காரில் வேகமாக புறப்பட்டார். அவரை போலீசார் விரட்டிச் சென்று சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் அருகே இரவு 10.30 மணியளவில் மடக்கி பிடித்தனர்.
தினகரன் காரில் வைத்திருந்த லஞ்சப் பணம் ரூ.50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தனித்துணை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) அலுவலகத்துக்கு தினகரன், கார் டிரைவர் ரமேஷ்குமார் ஆகியோரை அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். இதில் ஆவணங்களுக்கு இடையில் ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்த கணக்கில் வராத ரூ.1.94 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தினகரன் மற்றும் ரமேஷ் குமாரிடம் விடிய விடிய நேற்று காலை 7.20 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், இருவரையும் காட்பாடி அருகே தாங்கல் கிராமத்தில் உள்ள தினகரனின் வாடகை வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அந்த வீட்டில் உள்ள பெரிய பெட்டியில் பதுக்கி வைத்திருந்த ரூ.76 லட்சத்து 64 ஆயிரத்து 600 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் போளூர், ஜமுனாமரத்தூர், காட்பாடி அடுத்த தாங்கல் கிராமம் ஆகிய இடங்களில் தினகரன் வீட்டு மனைகள் வாங்கிக் குவித்து இருந்ததற்கான பல கோடி மதிப்பிலான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரது சொந்த ஊரான போளூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலும் மற்றொரு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, தினகரன் மற்றும் ரமேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். காரில் துரத்திச் சென்று லஞ்ச ஒழிப்பு அதிகாரியை போலீசார் பிடித்த இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சம் பெறுவது தொடர்பான புகாரில் பிடிக்கச்சென்று அவரது வீட்டில் பல லட்சம் ரூபாய், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்தோடு, அவருக்கு சொந்த இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in