இந்த 7 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ரத்து?! தாறுமாறாய் பணப்பட்டுவாடா?!
இந்த 7 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ரத்து?! தாறுமாறாய் பணப்பட்டுவாடா?!
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திருச்சி மேற்கு, கரூர், திருவண்ணாமலை, கோவை தெற்கு, கொளத்தூர் உள்ளிட்ட 7 தொகுதிகளிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, பின்னர் வேறொரு நாளுக்கு தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக அதிகளவில் இந்த தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன என்று தொடர்ந்து புகார்கள் வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் நேற்று மாலை வரையில், ரூ.428.46 கோடி பணம் மற்றும் பொருட்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியும், சரியான ரசீதுகள் இல்லாமலும் கொண்டு சென்ற நிலையில், பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும். தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் சட்டமன்ற தொகுதியில் மிக அதிகளவில் விதிமீறல் புகார்கள் வந்துள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
இப்படி புகார்கள் வந்த தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு, குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திருச்சி மேற்கு, கரூர், திருவண்ணாமலை, கொளத்தூர் உள்ளிட்ட 7 தொகுதிகளில் பிற தொகுதிகளை விட மிக அதிகளவில் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த தொகுதிகளில் அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளர்கள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து அந்த தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யும் முடிவில் தேர்தல் ஆணையம் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியத் தேர்தல் வரலாற்றிலே முதன் முறையாக தமிழகத்தில் தான் இப்படி பணப்பட்டுவாடா புகார் காரணமாக இதற்கு முன்னர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போன்று கடந்த 2019 வேலூர் மக்களவை தொகுதியிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.