புற்றுநோயாளியின் விருப்பம்: நிறைவேற்றினார் ‘ரியல் ஹீரோ’..! - வீடியோ

புற்றுநோயாளியின் விருப்பம்: நிறைவேற்றினார் ‘ரியல் ஹீரோ’..! - வீடியோ

Update: 2021-06-17 15:55 GMT

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி முதல், இந்தியா முழுவதும் ஊடரங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து, ‘ரியல் ஹீரோ’ என்று புகழ் பெற்றவர் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட்.

இவர், தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி, மும்பையில் உள்ள அவருடைய வீடு தேடி வரும் பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் உதவி வருகிறார். இவருடைய சேவையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அபிஷேக் ஜெயின் என்ற இளம் ரசிகருக்கு, தன் வாழ் நாளில் ஒரு முறையாவது தனது அபிமான நடிகர் சோனு சூட்டை சந்தித்துவிட வேண்டும் என்று தீராத ஆசை. இதையறிந்த நடிகர் சோனு சூட், அந்த ரசிகரை சந்திப்பதாக உறுதி அளித்திருந்தார். 

இதையடுத்து, தனது உறவினருடன் சோனு சூட் வீட்டிற்கு வந்த அபிஷேக் ஜெயின், சோனுவைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் வடித்தபடியே அவருடைய கைகளை பிடித்து காலில் விழுந்தார். அவரின் தோளைத் தட்டி தேற்றிய சோனு சூட், அபிஷேக்கின் கோரிக்கையை கேட்டறிந்தார்.

அத்துடன், அவருக்கு புதிய செல்போன் ஒன்றை பரிசளித்த சோனு சூட், தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்து, வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார். இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் வாழ்க்கையில் நான் எதையோ செய்திருக்கிறேன்; அதனால்தான் மக்கள் என் மீது இவ்வளவு அன்பைப் பொழிகின்றனர். அவர்களின் துயரங்கள் அனைத்தும் முடிவுக்கு வர இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

Tags:    

Similar News