இப்படி ஒரு மெசேஜ் வந்தா நம்பாதீங்க..!

இப்படி ஒரு மெசேஜ் வந்தா நம்பாதீங்க..!

Update: 2021-07-28 17:35 GMT

தமிழகத்தில்  சில மாதங்களுக்கு முன்பு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் தினகரன், சந்தீப்ராய் ரத்தோட், இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன், ஏடிஜிபி ரவி மற்றும் உதவிக்கமிஷனர்கள் அருள் சந்தோஷமுத்து ஆகியோர் பெயரில் மர்ம நபர்கள் போலியாக ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி, பலரிடம் பண மோசடி செய்து வந்தனர்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷகீல்கான், ரவீந்தர்குமார் மற்றும் முஸ்தகீன்கான் ஆகிய மூவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்..

இந்நிலையில், ஃபேஸ்புக்கில் எப்படி பண மோசடி செய்யப்பட்டதோ அதேபோல் தற்போது, டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவரின் புகைப்படத்தை வாட்ஸ்அப் டிபியாக வைத்து வாட்ஸ்அப் மூலம் மர்ம நபர்கள் மோசடி செய்து வருவதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன், டிஜிபி அலுவலக அதிகாரியின் புகைப்படத்தை வாட்ஸ்அப் டிபியாக வைத்துள்ள வாட்ஸ்அப்பில் இருந்து, “நண்பருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனது போன்பே வேலை செய்யவில்லை. எனவே, இந்த செல்போன் எண்ணுக்கு கூகுள் பே மூலம் 10 ஆயிரம் ரூபாய் அனுப்புங்கள். நாளைக்கு அதை அனுப்பிவிடுகிறேன்” என, அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மெசேஜ் சென்றுள்ளது.

இதில் சந்தேகமடைந்த நண்பர்கள் சிலர், டிஜிபி அலுவலக அதிகாரியை தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போதுதான் இந்த மோசடி குறித்து அவருக்கே தெரியவந்துள்ளது. இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

எனவே, “வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றில் வரும் இதுபோன்ற தகவல்களை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம்” என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News