விசாரணைக்கு வரும் வழக்கு! என்ன செய்யப் போகிறார் சசிகலா?
விசாரணைக்கு வரும் வழக்கு! என்ன செய்யப் போகிறார் சசிகலா?
2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து நடத்திய பொதுக்குழுக் கூட்டம் செல்லாது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, தங்களை நீக்கியதாகக் கூறப்படும் தீர்மானங்கள் உள்பட அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் டிடிவி தினகரனும் சசிகலாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
2016ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். 2017ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் இவர்கள் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறியதை எதிர்த்து தான் இருவரும் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கின் தகுதி அடிப்படையில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என தனியாக கட்சி தொடங்கி நடத்துவதால் வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாகக் கூறி வாபஸ் பெற்று விட்டார் தினகரன். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மதுசூதனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதிலளிக்குமாறு சசிகலாவுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ள நீதிபதி, அதற்குள் சசிகலா தரப்பின் பதிலையும் கேட்டுள்ளார்.
அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள சசிகலா என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் பதிலளிக்க கூடுதல் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியினர் சசிகலாவை சந்தித்து தலைமை ஏற்க கோரிக்கை வைப்பார்கள் என்று எதிர்பார்ப்பதால், நீதிமன்ற விவகாரத்தை தற்போதைக்கு ஒத்தி வைக்கும் முடிவையே எடுப்பார் சசிகலா என்று நம்பப்படுகிறது.